பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் மே மாதம் 22ஆம் தேதி ஜின்னா தோட்டம் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 97 பேர் உயிர் இழந்தனர். மேலும் பொதுமக்கள் 11 பேர் காயமுற்றனர். நல்வாய்ப்பாக இருவர் உயிர் பிழைத்தனர்.
இந்த விமான விபத்து குறித்து ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 11 வல்லுநர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமான விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்டமாக, விமான தரவுப் பதிவு (எஃப்.டி.ஆர்.) நேரம், உயரம், விமான அணுகுமுறை உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்கின்றனர். அடுத்து, காக்பிட் (கறுப்புப் பெட்டி) தொடர்பான குரல் பகுப்பாய்வு விசாரணை வருகிற 2ஆம் தேதி தொடங்குகிறது.
கறுப்புப் பெட்டி குரல் பதிவு (சி.வி.ஆர்.) என்பது விபத்துகள், விசாரணை நோக்கங்களுக்காக விமான டெக்கில் ஆடியோ சூழலைப் பதிவுசெய்ய பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் ஆகும். இது விமானிகளின் ஹெட்செட்களின் மைக்ரோஃபோன்கள், இயர்போன்களின் ஆடியோ சமிக்ஞைகளையும் கறுப்புப் பெட்டியில் நிறுவப்பட்ட பகுதி மைக்ரோஃபோனையும் பதிவுசெய்து சேமிக்கிறது.
விபத்து நடந்த இடத்தின் பணிகள் முடிந்ததும் பாகிஸ்தானின் விமான விபத்து, விசாரணை வாரியம் (ஏஏஐபி) குழு ஃபிரான்ஸ் செல்கிறது. விமானத்தின் கறுப்புப் பெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
தற்போது விசாரணை நடத்திவரும் ஃபிரான்ஸ் வல்லுநர் குழுவில், ஏர்பஸ் நிறுவன பிரதிநிதிகள், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, பிற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளனர். முன்னதாக அவர்கள் விமானத்தின் விமான தரவுப் பதிவுகளை மீட்டனர்.
மே 26 அன்று கராச்சியை அடைந்த விசாரணைக் குழுவினர், இரண்டு நாள்களில் திரும்புவதாக இருந்தனர். ஆனால், விசாரணைக்குத் தேவையான சில முக்கிய ஆதாரங்களைக் குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அவர்கள் மேலும் சில நாள்கள் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கராச்சி விமான விபத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு