வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுதப் பயிற்சிகளை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தி, ஜப்பான் 2006ஆம் ஆண்டு முதல், அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடை விதித்துவருகிறது.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் வடகொரியாவிற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தத் தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். வடகொரியாவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஜப்பானியர்களை விடுவிக்கக்கோரியும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரத் தடை வடகொரியாவை எவ்வாறு பாதிக்கும்?
- ஜப்பான்-வடகொரியா இடையே ஏற்றுமதி,இறக்குமதிக்குத் தடை
- வடகொரியா கப்பல்கள் ஜப்பான் கடற்பகுதிக்குள் நுழைவதற்குத் தடை
- வடகொரியா துறைமுகத்திற்குச் செல்லும் கப்பல்களுக்குத் தடை
இருநாட்டிற்கும் இடையே நிலவிவரும் பிரச்னைகள் குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விருப்பம் தெரிவித்துள்ள சூழ்நிலையில், இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
மேலும், அணு ஆயுதப் பயிற்சி முடக்குவது குறித்து தாய்லாந்து தலைநகர் ஹனாயில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே, பிப்ரவரி மாதம் நடைபெற்ற இரண்டாம் உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது.