பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டுப் பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், ஜூன் 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது வரியைச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் கடன் உயர்வு குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்றை அமைக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், கோட் லாக்பாட் சிறையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், "இம்ரான்கானின் வீழ்ச்சி நெருங்கிவிட்டது. இம்ரான்கான் கையாலாகாதவர், அவரது கையாலாகாத தனத்தை மறைக்கவே முந்தைய அரசு மீது குற்றஞ்சாட்டிவருகிறார். மேலும், நாட்டை அழிவின் விளிம்புக்குத் தள்ளியுள்ளார்.
கிரிக்கெட் வீரரான இம்ரான்கானை மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் விரைவில் தூக்கி வீசுவார்கள். பாணி காலாவில் உள்ள அவரது இல்லம் ஊழலுக்கு நடுவே சிக்கி உள்ளது. அவரை கண்டு அவரே வெட்கப்பட வேண்டும்" என்றார்.