இஸ்லாமாபத்: ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவைக்கு விதித்துள்ள தடை பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. இதற்கிடையில் வணிக விமானிகளுக்கு உரிமம் வழங்கும் செயல்முறை குறித்து ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்திற்கு பதிலளித்து விட்டோம். எனவே அது பாகிஸ்தான் விமான சேவைக்கான தடையை நீக்கிவிடும் என பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திலிருந்து இலவசமாக பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் பாதுகாப்பு குறித்து தணிக்கை நடத்த முடியுமா எனக் கேட்டுள்ளோம். அதுநரை விமானங்களை இயக்க தற்காலிக அனுமதியை வழங்கலாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம், மீண்டும் பாகிஸ்தான் சர்வதேச விமான சேவைக்கு (பிஐஏ) மேலும் மூன்று மாதங்கள் தடையை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (சிஏஏ) பாதுகாப்பு தணிக்கைக்குப் பிறகுதான் இந்தத் தடை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானங்களை இயக்கும் பைலட்கள் பலர், தேர்வில் மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் இந்தத் தடையை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.