பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு விலைவாசி உயர்வு பிரச்னை எழுந்துள்ளது. விலைவாசி உயர்வு குறியீடு 13 விழுக்காட்டை தாண்டியுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஏற்கனவே, சர்வதேச நாடுகள், அமைப்புகளிடம் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறிவரும் நிலையில், தற்போதைய சூழல் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசை கவிழ்ப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக போர்குரல் எழுப்பியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு காட்டமாக பதிலளித்து அவர் கூறியதாவது, "பணத்தின் மூலம் எனது அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதிவேலை செய்கின்றன. எனது ஆட்சியின் பலன்கள் விரைவில் தெரியவரும். நாடு சிறந்து விளங்க வேண்டும் என்றால் மக்கள் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்.
நாட்டின் இளைஞர்களின் நலனுக்காகவே தான் அரசியலில் சேர்ந்தேன். உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றின் விலைகளை சீர்செய்து குறைக்க நான் அரசியலில் சேரவில்லை. அதுவொன்றும் பிரதமரின் வேலையில்லை. ஊழல் நோக்கத்துடன் செயல்படும் எதிர்க்கட்சிகளை தடுத்து நிறுத்துவது நீதித்துறையின் கடமை எனப் பேசியுள்ளார்.
மொத்தம் 342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளுக்கு 272 வாக்குகள் தேவை. 2018ஆம் ஆண்டும் இம்ரான் கான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அடுத்த பொதுத்தேர்தல் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க ஊடகவியலாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை!