உலக சுகாதார அமைப்பானது (WHO) உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் குறித்து வியன்னாவில் அவரசக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அக்கூட்டத்தில் எபோலா, பன்றிக் காய்ச்சலைப்போல் கரோனா வைரஸுக்கு சர்வதேச சுகாதார அவரசநிலை ஏற்பட்டுள்ளதா என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஒருவேளை அவரசநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தால் சர்வதேச அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்படும். ஏனென்றால் சீன புத்தாண்டும், வசந்த கால விடுமுறையும் ஜனவரி 24ஆம் தேதிக்குப் பிறகு வரும் நிலையை கருத்தில்கொண்டு, இக்கூட்டத்தை உலக சுகாதார அமைப்பு நடத்தியது.
ஒவ்வொரு சீன விடுமுறைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் சீன சுகாதார ஆணையம் வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதுவரை 571 பேருக்கு வைரஸ் தாக்கியிருக்கிறது என்றும்; உயிர் பலி 17ஆக உயர்ந்துள்ளது என்றும் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நோய் சீனாவின் வுஹான் நகரிலிருந்தும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் பரவுவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்தியாவில் இது குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கு மருத்துவம் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் விடுமுறை காரணமாக வெளியேறிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து வுஹான் நகரில் பேருந்து போக்குவரத்தும், சுரங்கப்பாதை போக்குவரத்தும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் ஜனவரி 23ஆம் தேதி காலையிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் முகமூடி அணிய வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலகை அச்சுறுத்தும் கரோனா வைரசை அறிவோம்