ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஆனால், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடருகின்றன. குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
அந்த வகையில், நேற்று தெற்கு ஜாபுல் மாகாணத்தில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடியில் தாலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், அமெரிக்க ஒப்பந்தத்தின்கீழ் விடுவிக்கப்பட்ட தாலிபான் தளபதி அஹ்மத் ஷா உள்பட ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், வடகிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான குண்டுஸில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தாலிபான் அமைப்பினர் கருத்து தெரிவிக்கவில்லை.