அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கவுள்ளார்.
இதுகுறித்து ஜோ பிடன் கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு நெருக்கமான பந்தம் உள்ளது. நான் அமெரிக்க செனட்டர் பதவியிலிருந்த போது, அந்த பந்தம் நெருக்கமாக இருப்பதை நன்கு உணர்ந்திருந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுடனான வரலாற்று உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான முயற்சிகளுக்கு நான் தலைமை தாங்கினேன். இந்தியா, அமெரிக்கா நட்பு நாடுகளாகத் திகழந்தால் உலகம் மொத்தமும் பாதுக்காப்பான இடமாக மாறும். உலக அமைதிக்கு அது வழிவகுக்கும். அமெரிக்க அதிபராகத் தேர்ந்தேடுக்கப்பட்டால் இந்தக் கொள்கையில் நிச்சயம் உறுதியாக இருப்பேன். அதே போல், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுடன் துணை நிற்பேன். இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளேன். அவர் புத்திசாலி என்றும் நாட்டை நல்வழியில் ஆட்சி செய்யத் தயாராக இருக்கிறார் என்றும் அனைவருக்கும் தெரியும். அதே சமயம், இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு அவரது தாயார் குடியேறிய கதை பிரம்மிக்க வைக்கிறது. இது நமது தன்னம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என்றும் தெரிவித்தார். மேலும், எச் -1பி விசாக்களில் ட்ரம்ப் ஆட்சி கொண்டு வந்த மாற்றங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்