அமெரிக்க அதிபர் பதவிக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் யார் போட்டியிடப்போவது என்பதில் பெரிதும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
குறிப்பாக ஜோ பிடன், பெர்னி சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்வுசெய்ய செவ்வாய்க்கிழமை பல்வேறு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முன்னிலை வகித்தார்.
இத்தேர்தலில் எலிசபெத் வாரனுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அவரால் மூன்றாவது இடமே பெற முடிந்தது. இதனால் அதிபர் தேர்தல் களத்திலிருந்து தான் விலகவுள்ளதாக மாசசூசெட்ஸ் மாகாண உறுப்பினரும் ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பெண் வேட்பாளர்களில் ஒருவருமான எலிசபெத் வாரன் தற்போது அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் கட்டமைப்பையே மாற்ற வேண்டும் என்ற முழக்கத்தோடு தனது பெரும் பரப்புரையை எலிசபெத் வாரன் தொடங்கினார். மேலும், 50 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புடைய வீடுகளை வைத்துள்ள பெரும் பணக்காரர்களுக்கு இரண்டு விழுக்காடு செல்வ வரிவிதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். இருப்பினும் அவரால் கட்சிக்குள்ளேயே எதிர்பார்த்த ஆதரவைப் பெற முடியவில்லை.
எலிசபெத் வாரனும் விலகியுள்ளதால், தற்போது ஜனநாயகக் கட்சியிலிருந்து துளசி கபார்ட் மட்டுமே பெண் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸிலிருந்து வெளியேறினார் ப்ளூம்பெர்க்!