இந்தியாவில் கோவிட்-19 தீவிரமடைந்துள்ளதால், அதைத் தடுக்க பல்வேறு வழிகளில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தை துரித கதியில் செயல்படுத்த அரசு முனைந்துள்ளது.
இதற்காக தடுப்பூசி தயாரிக்கும் மூலப் பொருள்களை இந்திய உற்பத்தியாளர்களுக்குத் தந்து உதவுமாறு அமெரிக்காவுக்கு அரசு சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.
முதலில் இந்தக் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. தங்கள் நாட்டின் தேவைக்குதான் முதல் உரிமை என்ற நோக்கில் அமெரிக்க அரசு செயல்பட்டதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் கிளம்பின.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவனுடன் அஜித் தோவல், நிலைமையின் தீவிரத்தை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோவிட்-19 பேரிடரை எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். எனவே, தடுப்பூசி தயாரிக்கும் மூலப் பொருள்களை இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது என ஜேக் சுலிவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துருக்கி மீது விமர்சனம்; அமெரிக்க தூதருக்கு சம்மன்