அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைப் படையெடுத்த அமெரிக்கா, அங்கு நடைபெற்ற தலிபான் ஆட்சியை அகற்றி, புதிய அரசை நிறுவியது.
இதையடுத்து, அமெரிக்க அரசுக்கும், தலிபான் பயங்கரவாத படையினருக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாகக் கடும் மோதல் நிலவி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரவும், அமெரிக்கத் தலைமையிலான நாட்டோ படையினரை திரும்பப்பெற வழிவகை செய்யும் நோக்கிலும், அமெரிக்கா - தலிபான் இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 29ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்த ஒப்பந்தத்தை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இதனிடையே, ஒப்பந்த விதிகளை மீறி, தலிபகான்கள் ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுதவிர, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி, எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா இடையே நிலவும் மோதல், அங்கு அமைதி திரும்புவதை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் குடியரசு தின ஒத்திகையில் விபத்து - விமானி உயிரிழப்பு!