வாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதள பக்கங்கள் காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக டொனால்ட் ட்ரம்பின் சமூக வலைதள பதிவுகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. சில நேரங்களில் அது வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து விடுகிறது. இதனைத் தடுத்து நிறுத்தும் விதமாக பேஸ்புக் நிறுவனம் தங்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் ட்ரம்ப் தொடர்ந்து செயல்பட காலவரையின்றி தடைவிதித்துள்ளது.
அதேபோல ட்விட்டர் நிறுவனமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்படும் பதிவுகளின் சமநிலையை கடைபிடிக்கவும், வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகள் பதிவிடுவதைத் தவிர்க்கவும், நிறுவனங்கள் பெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பைடன் வெற்றியை ஏற்க மறுப்பு
இச்சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென அந்த கட்டடத்திற்கு வெளியே ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.
ட்ரம்ப் சர்ச்சை கருத்து
ட்ரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற (வெள்ளை மாளிகை) கட்டடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனினும் பாதுகாப்பு படையினரை மீறி நூற்றுக்கணக்கானோர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய ட்ரம்ப், அந்தக் காணொலிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
எல்லாத்துக்கும் காரணம் ட்ரம்ப்தாங்க - சரமாரி குற்றச்சாட்டு வைக்கும் பைடன்!
அதேபோல், ட்ரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, வன்முறையை தூண்டும் வகையிலிருந்த அந்தக் காணொலிகளை அந்தந்த சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கின.
தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தேர்தல் காலத்திற்கு முன்னதாகவே ட்ரம்ப் பதிவுகள் குறித்து சமூக வலைதள நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துவந்தது. தேவையற்ற சர்ச்சை கருத்துக்கள் பதிவிட்டால், கணக்குகள் முடக்கப்படும் எனவும் கூறியிருந்தன. ஆனால், ட்ரம்ப் அதை எல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து பலமுறை அவரது சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.