அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
தேர்தல் நடைபெற இன்னும் 50க்கும் குறைவான நாள்களே உள்ளதால் இரு கட்சினரும் தங்களது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு பார்சல் மூலம் விஷம் அனுப்பப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படும் தபால்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கென தனியாக ஒரு கண்காணிப்பு நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இதேபோல வெள்ளை மாளிகைக்கு வந்த தபாலை வழக்கம்போல் பரிசோதனை நிலையத்தில் அலுவலர்கள் சோதித்துள்ளனர். அப்போது அதில் கொடிய விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க புலானாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தபால் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அனுப்பியது யார் உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரணையில் எஃப்.பி.ஐ. இறங்கியுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் இச்சம்பவம் குறித்த மற்ற தகவல்களை பகிர்ந்துகொள்ள எஃப்.பி.ஐ. மறுத்துவிட்டது.
முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு இதேபோல அதிபர் ட்ரம்பிற்கும் மற்ற முக்கிய அலுவலர்களுக்கும் விஷம் அனுப்பப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படை அலுவலர் ஒருவர் கைது செய்யப்ட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஏப்ரலுக்குள் கரோனா தடுப்பூசி - ட்ரம்ப் உறுதி...!