மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஒரு பாரசைட் நோயாகும். பெரும்பாலும் சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்யும் பெண் அனோஃபிலெஸ் (Anopheles) கொசுக்கள் மூலமே மலேரியா பரவுகிறது. ஓராண்டிற்கு உலகம் முழுவதும் நான்கு லட்சத்து 35 ஆயிரம் பேர் மலேரியாவால் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள குழந்தைகள் இதனால் பெரும் பாதிப்படைகின்றனர். மலேரியா நோயைக் கட்டுப்படுத்த உலகளாவிய அளவில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அதனை ஏற்படுத்தும் பாரசைட்கள் மரபியல் மாற்றம் அடைந்து தடுப்பு மருந்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
இந்நிலையில், மலேரியாவை ஏற்படுத்தும் பாரசைட் உருமாறி இருப்பதாகவும் அதன்காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு மலேரியா வராமல் இருப்பதற்காகப் போடப்படும் தடுப்பு மருந்தில் வீரியம் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் பணியாற்றிவரும் டானே கிளார்க் இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளார்.
தொடக்க காலத்தில், சல்படாக்சின்-பைரிமெத்தமைன் என்ற மலேரியா தடுப்பு மருந்து அனைவருக்கும் போடப்பட்டுவந்தது. ஆனால் தற்போது கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்குமே இது முதன்மையாகப் போடப்பட்டுவருகிறது.
பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற பாரசைட்டில் மரபியல் மாற்றம் நடைபெற்று அது சல்படாக்சின்-பைரிமெத்தமைனுக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் மலேரியா பரவலைப் பெருமளவில் தடுக்க முடியும்.