அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடவுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளதால் இரு கட்சிகளும் தங்களது பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கரோனா பரவல் காரணமாகத் தேர்தலில் பரப்புரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், அமைப்புகளை குறிவைத்து ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவில் சைபர் தாக்குதல்கள் நடைபெறுதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில வாரங்களாக அதிபர் தேர்தல் பரப்புரைகளில் சம்பந்தப்பட்ட நபர்களையும் அமைப்புகளையும் குறிவைத்து சைபர் தாக்குதல் முயற்சிகள் நடைபெற்றுள்ளன.
இதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். நேரடியாக ட்ரம்ப், பிடன் பரப்புரைகளைக் குறிவைத்து நடைபெற்ற சில தோல்வியுற்ற தாக்குதல்களும் இதில் அடக்கம்.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவுகளை மாற்றும் முயற்சிகளை எதிர்பார்த்தபடியே வெளிநாட்டு குழுக்கள் தொடங்கிவிட்டன என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இந்த சைபர் தாக்குதல்கள் பெரும்பாலும் ரஷ்யா, சீனா, ஈரானிலிருந்து நடைபெருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அப்போதைய அதிபர் ஹிலாரி கிளின்டனின் தோல்விக்கு ரஷ்யாவின் தலையீடே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த விதத்திலும் தான் தலையிடவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் அதிபரானால் அது நாட்டிற்கு அவமானம் - அதிபர் ட்ரம்ப்