அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் அரசு தோல்வியடைந்து விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைகளில் இரு கட்சியினரும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் 77 வயதான முன்னாள் அதிபர் ஜோ பிடன், டரம்பை எதிர்த்து களமிறங்கவுள்ளார். சமீபத்தில்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி திரட்டும் விழாவில் பேசிய ஜோ பிடன், "நாடு முழுவதும் முகக்கவசங்கள் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். முகக்கவசங்களை அணிந்தால் உங்கள் மூலம் வைரஸ் பரவுவது குறையும். நம்மால் மற்றவர்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க நாம் முகக்கவசங்களை அணிய வேண்டும்.
இது அமெரிக்கா. நாட்டின் மீது பற்றுடன் இருங்கள். உங்கள் சக குடிமக்களை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையது. சரியானதைச் செய்யுங்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆளுநரும் கட்டாய முகக்கவசங்களை அணிய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, கரோனா தொடர்பாக காலம் தாழ்த்தி கருத்துகளைக் கூறுவதாக தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த பிடன், "யாரும் என்னைக் குறை கூறவில்லை. நாம் தற்போது சீன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம், அதை நாம் மறக்கப் போவதில்லை. சீன நோயால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை" என்றும் கூறினார்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 55,364 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 54 லட்சத்து 15 ஆயிரத்து 666 எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் அமெரிக்காவில் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 415 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'இது எங்க லிஸ்ட்லயே இல்ல' - ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு