பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன. ஒப்பந்தத்தின்படி, 24 MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதன் மூலம் இந்திய கடற்படை வலுப்பெறவுள்ளது. போர்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை இந்த ஹெலிகாப்டருக்கு உள்ளது.
MK-46, MK-56 ரக ஹெலிகாப்டர்கள் கடினமான சூழல்களில்கூட எதிரி நாட்டுப் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும். இதேபோன்ற திறன்கள் சீஹாக் ஹெலிகாப்டருக்கும் உள்ளது. கடற்படையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில், MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களில் உணர்விகள் (சென்சார்) பொருத்தப்பட்டு மிகவும் உயர் ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த விமான பாதுகாப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு 1.9 பில்லியன் டாலர்களுக்கு விற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தப் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், பாதுகாப்பு உள்பட பல துறைகளில் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் இந்திய அமெரிக்க உறவு ஏற்றம் கண்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் மட்டும், 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இரு நாடுகள் கையெழுத்திட்டன. இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மேம்பட்டுள்ளது தெரியவருகிறது.
பாதுகாப்பு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்குத் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் நோக்கில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புத் துறையின் முக்கியமான நட்பு நாடாக இந்தியாவை, அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்மூலம், பல தொழில்நுட்பங்களை இரு நாடுகள் பகிர்ந்துகொள்ளவுள்ளன.
இதையும் படிங்க: 'மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்' - இந்தியாவின் வருகை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூசகம்!