அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவி மெலினா ட்ரம்பிற்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் கடந்த வாரம் வீடு திரும்பினார். சில நாள்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்த ட்ரம்ப், திங்கள்கிழமை முதல் பரப்புரைகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இருப்பினும், மெலினா ட்ரம்பின் நிலை குறித்து எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. மேலும், ட்ரம்பின் பரப்புரை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடைசியாக செப்டம்பர் 29ஆம் தேதி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் நடைபெற்ற விவாதத்தில் ட்ரம்ப்புடன் மெலினா ட்ரம்ப் பங்கேற்றார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியை அறிவிக்கும் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றாமல் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் மூலமே ட்ரம்ப்பிற்கும் மெலினா ட்ரம்பிற்கும் கரோனா பரவியிருக்கக் கூடும் என்று பரவலாகக் குற்றச்சாடுகள் எழுந்துள்ளன.
கரோனா உறுதி செய்யப்பட்ட பின் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மெலினா ட்ரம்ப் தனது ட்விட்டரில், “அனைத்து பிரார்த்தனைகளுக்கும் எனது குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
அதன் பின் மெலினா குறித்து எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. மெலினா அலுவலகத்திடம் இருந்தும் அவரது உடல்நிலை குறித்து எவ்வித அப்டேடும் வெளியாகவில்லை. ட்ரம்ப் பரப்புரைக் குழுவிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நான் சூப்பர் மேனாக உணர்கிறேன்' - ட்ரம்ப்பின் பலத்திற்கு காரணம் என்ன?