அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் களமிறங்குகின்றனர்.
அதிபர் தேர்தல் தொடர்பான பரப்புரைகளில் இரு தரப்பினரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும், இணையதளங்களிலும் இரு கட்சிகளும் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பரப்புரைகள் ஒருபுறம் நடைபெறும் அதே வேளையில், ஏகப்பட்ட போலி செய்திகளும் இணையத்தில் தீயாகப் பரவுகின்றன. இதுபோன்ற போலி செய்திகள், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தல் பாதையையே மாற்றக்கூடும் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பும்கூட தபால் வாக்கு, கரோனா ஆகியவை குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பதிவிட்டார். இந்தப் பதிவுகளை ட்விட்டர் நீக்கியது. ஆனால், இதுபோன்ற கருத்துகளை நீக்குவது பேச்சுரிமைக்கு எதிரானது என்று பேஸ்புக் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவில், தேர்தல் நாளுக்கு ஏழு நாள்களுக்கு முன்னதாகவே தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது. இருப்பினும், இதை எவ்வாறு அமல்படுத்தப்போகிறார்கள் என்பது குறித்த தெளிவான வழிமுறைகளை பேஸ்புக் அறிவிக்கவில்லை.
மேலும், கோவிட்-19 மற்றும் தேர்தல் தொடர்பாக இணையத்தில் தவறாக பரவும் செய்திகளுக்குக் கீழ், மக்கள் உண்மையான செய்திகளை அறிந்துகொள்ள லிங்கும் கொடுக்கப்படும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், "தேர்தல் என்பது மற்ற வியாபாரங்களைப் போல் இல்லை. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. எனவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். மேலும், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் பேஸ்புக் செயல்படும்” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ”கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைய மாட்டோம்" - அமெரிக்கா