தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் புத்தாடை அணிந்து, இனிப்பு சாப்பிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உண்மை, ஒளி, நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது. முக்கிய திருவிழாவான தீபாவளியை முன்னிட்டு, நேற்று மாலை காணொலி காட்சி வழியாக தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றுக்கொண்டேன். கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.