ஹைதி: வட அமெரிக்காவின் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதி நாட்டில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியது. தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சிலிருந்து 125 கி.மீ. தொலைவில் இந்த நிலடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 2,189 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மீட்புப்பணிகள் தீவிரம்
ஹைதி, கரீபியன் கடலின் மூன்றாவது பெரிய தீவாகும். கிரேட்டர் அண்டிலிஸ் தீவுக்கூட்டத்தில், ஹிஸ்பானிலோ தீவில் அமைந்துள்ளது. இது கியூபா, ஜமைக்கா தீவுகளுக்கு கிழக்கிலும், பஹாமாஸ், கைகோஸ் தீவுகளுக்கு தெற்கிலும் உள்ளது.
இந்த நாடு டொமினிக்கன் குடியரசோடு நாட்டை பகிர்ந்துகொள்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
குறிப்பாக, ஹைதியில் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ஏழாக பதிவானது. அப்போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
மேலும், மீட்புப் பணிகளில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் மட்டுமல்லாது, அண்டை நாடுகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே புதன் கிழமை அந்நாட்டை வலிமையான புயல் தாக்கியது. இதனால், மீட்புப் பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் இருந்ததாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
5 லட்சம் குழந்தைகளின் நிலை
கட்டட இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றன. இந்த நிலநடுக்கத்தால், 5 லட்சம் குழந்தைகள் உட்பட 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை அந்நாட்டு அரசுடன் இணைந்து அவ்வமைப்பு செய்துவருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 8 மில்லியன் டாலர்களை ஐநா வழங்கியுள்ளதாக அதன் செய்தித்தொடர்பாளர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஐந்து வயதிற்குட்பட்ட 167,000 குழந்தைகள் உட்பட 385,000 பேர்களின் அவசர தேவைகளுக்கு உதவ 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது.
உணவு, பாதுகாப்பான குடிநீர், தங்குமிடம் ஆகியவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து யுனிசெஃப் செயல்பட்டுவருகிறது. நிலநடுக்கத்திற்கு முன்னதாகவே, உள்நாட்டில் அமைதியின்மை, ஹைதி நாட்டின் அதிபர் படுகொலை உள்ளிட்டவைகளால் அந்நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆவணமில்லாதவர்கள் வெளியேறுங்கள் - தாலிபான்கள்