உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக, இத்தேர்தல் முழுவதும் தபால் மூலம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில், 74 வயதான அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் 77 வயதான முன்னாள் அதிபர் ஜோ பிடனும் களமிறங்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 6 முதல் 8 விழுக்காடு வரை ட்ரம்பைவிட ஜோ பிடன் முன்னணியில் உள்ளார்.
இந்தத் தேர்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனை தோற்கடிக்கும் பரப்புரைகளில் ரஷ்யா இறங்கியுள்ளதாக அமெரிக்க புலானய்வுத் துறை சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதேபோல், சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதால்தான், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளதாகவும் அமெரிக்க உயர்மட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய ஆதரவு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "ரஷ்யா வெற்றிபெற நினைக்கும் கடைசி நபராகதான் நான் இருப்பேன். ஏனென்றால், என்னைவிட யாரும் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க மாட்டார்கள்.
அதிபர் தேர்திலில் தூங்குமூஞ்சி பிடன் வெற்றி பெறுவதைப் பார்க்கவே சீனா விரும்புகிறது. அப்போதுதான் அமெரிக்காவை தனதாக்கிக்கொள்ள சீனாவால் முடியும்" என்றார்.
முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்யா உதவியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியர்களின் வாக்கு ட்ரம்பை வெற்றிபெற வைக்கும் - அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன்!