அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
கரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார மந்தநிலை, வேலையின்மை ஆகியவை காரணமாக அதிபர் ட்ரம்புக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் அதிபர் ட்ரம்புக்கு 42 விழுக்காடு மக்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோ பிடன் அமெரிக்கா அதிபரானால் இரட்டை கோபுர தாக்குதல்போல மற்றொரு தாக்குதல் அரங்கேறும் என்று அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பைத் தோற்றுவித்த ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்விட்சர்லாந்தில் வசித்துவரும் நூர் பின்லேடன் இது தொடர்பாக நியூ யார்க் டைம்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், "ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் ஒபாமா-பிடன் காலத்தில்தான் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவியது அப்போதுதான்.
ஆனால், பயங்கரவாதிகளை வேருடன் அழித்து அமெரிக்காவை ட்ரம்ப் பாதுகாத்தார். அவர் பயங்கரவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்தார்" என்றார்.
மேலும், மனதளவில் தான் எப்போதும் அமெரிக்கர்தான் என்று கூறிய நூர் லேடன், இத்தலைமுறையில் முக்கியமான இத்தேர்தலில் தான் ட்ரம்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ட்ரம்ப் நிச்சயம் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேற்குலக கலாசாரத்திற்கும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கும் இது முக்கியமானது. மக்களுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும் நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப்பை நம்பமாட்டேன்: கமலா ஹாரிஸ்