2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டன் மீது கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் விளாடிமர் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவி கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்த வலியுறுத்தலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அந்நாட்டிற்கு அமெரிக்கா வழங்கிவரும் ராணுவ உதவிகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என ட்ரம்ப் மிரட்டியதாகவும் அமெரிக்க உளவுத் துறையைச் சேர்ந்த முக்கிய பொறுப்பில் உள்ளவர் (WhistleBlower) அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரானது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ட்ரம்ப் மீதான இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் (நாடாளுமன்ற கீழ்) அவைத் தலைவர் நான்சி பெலோசி கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ட்ரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமேயானால் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் கர்ட் வொல்கர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சர்ச்சை அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதிபலிக்கலாம் எனக் கருதப்படுகிறது.