சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமர் அல் பஷீரை, அந்நாட்டு ராணுவம் அதிரடியாக ஏப்ரல் 11ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், அவருக்கு எதிராக போராடிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதற்கிடையே, மூன்று மாதங்களுக்கு அவசர நிலை இருக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவம் ஆட்சியை கவனிக்கும் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தலைநகர் கார்டூமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராணுவத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் ஆட்சியை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் நேற்று(திங்கட்கிழமை) மேற்கொள்ளப்ட்டது. இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்திலேயே போராட்டக்காரர்களை குறிவைத்து சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்புப்படை வீரர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சூடானில் கடந்த டிசம்பர் மாதம் "பிரட்" விலையை அந்நாட்டு அரசு உயர்த்தியதன் விளைவாகத் தொடங்கப்பட்ட போராட்டத்தால் இதுவரை 90 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.