சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
- பொதுமக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள், புதிய மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய நிலை, பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆற்றிவரும் பணிகள் குறித்தும்,
- அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும், JICA (ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை), உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும்,
- இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தவு குறித்தும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனை செயல்பாடுகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
- அரசு மருத்துவ நிலையங்களில் உள்ள பணியாளர் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புதல்,
- உணவுப் பாதுகாப்பு, மருத்துவமனை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளைத் திறம்பட மேற்கொள்ளுதல்,
- பொதுமக்களுக்கு இணையவசதிகள் ஏற்படுத்துதல், தமிழ்நாட்டில் சுகாதாரத் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துதல்
ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனைகள், திறமைமிக்க மருத்துவர்கள், செவிலியர், மருத்துவம் சார்ந்த மாணாக்கரை உருவாக்குவதில் சர்வதேச தரத்தை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ச. கிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.