சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டை இயக்குநர்கள் இணைந்து 'லாக்கர் 'என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளனர். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களிலும், மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கதாநாயகியாக அறிமுக நடிகையான நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்துள்ளவர். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.
மேலும் பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா, விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்த் கணபார்த்தி பணியாற்றியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
லாக்கர் பட நாயகி நிரஞ்சனி: விழாவில் கலந்து கொண்ட லாக்கர் பட நாயகி நிரஞ்சனி பேசுகையில், “எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத்தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டபோது, முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால், நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது.
எல்லோருக்கும் முதல் படம் என்கிறபோது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண்.
இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக, பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள்” என்றார்
இரட்டை இயக்குநர்கள்: படம் குறித்து இரட்டை இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் பேசுகையில், “இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால், தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்.
நாங்கள் சில ஆண்டுகளாக குறும்படங்கள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம். கதையை 20 நாளில் தயார் செய்து, தயாரிப்பாளரிடம் கொடுத்தோம். அப்படித்தான் இந்தக் கதை உருவானது” என்றார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம்: ''எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார். இயக்குநர் ராஜசேகர், எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார். ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால், என்னை வைத்து இயக்குவதாகச் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்றார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் 'வா வரலாம் வா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!