சென்னை: திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து, நடிகர் சங்கம் சார்பில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டாது.
ஆனால், தான் தவறாக ஏதும் பேசவில்லை என மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இதனை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுக்க, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதமும் அனுப்பியது.
இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், நேற்று (நவ.23) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத் தாக்கல் செய்தார்.
இதனிடையே, மன்சூர் அலிகான் தலைமறைவாகி உள்ளார் எனத் தகவல்கள் வெளியாக, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும், தனக்கு தொண்டை பிரச்னை உள்ளதால் நேற்று காவல் நிலையத்திற்கு வர முடியாது என கடிதம் மூலம் காவல் நிலையத்துக்கு தெரிவித்த மன்சூர் அலிகான், தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் இன்று (நவ.24) நேரில் வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், நேற்று மதியம் நேரில் மன்சூர் அலிகான் வந்தார். மேலும், தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பெயரைக் குறிப்பிட்டதால், முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக மன்சூர் அலிகான் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிமன்றம் ஒன்றும் மைதானம் அல்ல என நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதனையடுத்து, மன்சூர் அலிகான் தரப்பில் புதிய முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரி உள்ளார்.
இது தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம், அடக்க நினைத்தால் அடங்கமறு, இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு, ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி, பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எதிர்த்து என்னைக் கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை.
எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கப்பூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு. என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும்.
கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடற கற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும்.
மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான், நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியைக் கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்.
பெண்ணிலிருந்துதான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார், நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடுதான் ஆண்மையை அழியுங்கள் என்றார், பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8' வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர்.
சினிமா பார்க்கவிடாது 10ஆம் வகுப்பு வரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா, இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும், எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது, நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக, ஆமீன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மன்சூர் அலிகான் சிறுபான்மையினர் என்பதால் பாஜக நெருக்கடி தருகிறது" - ரஞ்சன் குமார்