சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை, ஏஜிஸ் எண்டர்டெய்மண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. “புதிய கீதை” படத்திற்குப் பிறகு, 20 வருடம் கழித்து விஜய் - யுவன் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு மே 21ஆம் தேதி நடிகர் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அறிவிப்பு வீடியோ ஒன்று வெளியானது. இதனை அடுத்து, ‘தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ கடந்த அக்டோபர் 24ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயனும், ஒளிப்பதிவாளராக சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் ’தளபதி 68’ படத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்யின் தோற்றம் 3டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு, தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. The Greatest of All Time என பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதன் மூலம் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என தெரிகிறது. இப்படத்திற்கு தி வெங்கட் பிரபு ஹீரோ என்று டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழையால் குண்டும் குழியுமான மாஞ்சோலை சாலை.. மாணவர்கள் அவதி!
இப்படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக அறியப்படும் நிலையில், வயது முதிர்ந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமீபத்தில் ஒரு விழா மேடையில் சினேகா அறிவித்தார். அப்போது பேசிய அவர், “விஜய்க்கு ஜோடியாக நடிப்பதில் ரொம்ப அதிர்ஷ்டம் செய்துள்ளதாக நினைக்கிறேன். விஜய் மிகவும் இனிமையான நபர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தால் எப்படி இருக்கீங்க என்று கேட்போம். ஆனால் நான் அவரை என்னங்க எப்பவும் இப்படியே இருக்கீங்க என்று கேட்டேன். அவரும் என்னை திருப்பி இதையே கேட்டார்” என்றார்.
இருவரும் இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு “வசீகரா” என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேடத்தில் நடிக்க முதலில் ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது என்றும், அவர் மறுக்கவே சினேகா இந்த வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை.. வேலூர் கொசப்பேட்டை மக்கள் அச்சம்!