சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள வள்ளிமயில் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி, சத்யராஜ், இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட படக்குழு கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் டி.இமான், "சுசீந்திரனுடன் சேர்ந்து நிறைய படங்கள் பணியாற்றி உள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். தற்போது படமாக உருவாகி இங்கு வந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பாடல்களுக்கு இசையமைத்து தற்போது நடிகராக உயர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி, வாழ்த்துகள். 'நான்' படத்தை பார்த்து விட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என்றார்.
விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, ”பிச்சைக்காரன் 2 படம் இயக்கும் போது பாதியில் வள்ளிமயில் படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அது பிச்சைக்காரன் படத்தை இயக்க நிறைய உதவியது. எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நல்ல கதையில் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். டி.இமான் இசையமைக்கும் போது உங்களோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுகிறேன்.
நானெல்லாம் இசையே தெரியாமல் இசையமைத்து விட்டேன். ஆனால் உங்களுடைய பணி அருமை. உங்கள் அப்பாவிடம் நான் கூறி இருந்தேன். தற்போது இந்த உயரத்துக்கு வந்துள்ளீர்கள். ரொம்ப சந்தோஷம். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் சத்யராஜ் மேடையில் பேசுகையில், “நிறைய படங்களில் நமது கொள்கை கோட்பாடுகளை உள்ளே கொண்டு வந்து நடிக்க முடியாது. சினிமா என்பது தொழில். ஒரு சில படங்களில் அமைந்து விடும். அப்படி இந்த படம் அமைந்துள்ளது. சுசீந்திரன் இன்னொரு கதை கூறி உள்ளார். அது ஒரு வில்லன் கதாபாத்திரம் நிச்சயமாக அதை செய்வோம்.
விஜய் ஆண்டனியுடன் இது 2வது படம். இதற்கு முன் காக்கி படத்தில் நடித்துள்ளேன். 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்' என்ற பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறார். வள்ளிமயில் படம் வந்து பூவுக்குள் பூகம்பம் மாதிரி. தலைப்பு இனிமையாக உள்ளது. கதாநாயகி பெயரில் உள்ளது. அதற்கு ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய நன்றி.
நான் நடித்த 'திருமதி.பழனிச்சாமி' படத்திற்கு ஒரு பத்திரிகையில் அது ஏன் இப்படி ஒரு தலைப்பு, நாயகிக்கு பெயர் இல்லையா அது என்ன அப்படி ஒரு ஆணாதிக்க எண்ணம் என ஒரு பேச்சு வந்தது. அதன்பின் ஹீரோயின் பெயரில் நீண்ட ஆண்டுகள் கழித்து வந்த படமென்றால் சந்திரமுகி தான். ரஜினி நடித்திருந்தாலும் ஜோதிகா பெயரில் தலைப்பு இருக்கும். நானும் 100 படங்களில் நாயகனாக நடித்துள்ளேன்.
அந்த ஈகோ என்ன என்று எனக்கும் தெரியும் எனவே நாயகி பெயரில் பட தலைப்பு வைத்த உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். இமான் பற்றி சொல்ல வேண்டும் என்றால் சிபியும் இவரும் ஒன்றாக படித்தவர்கள், ஈழத்தமிழர் பற்றி பேசும் படமாக உருவான உச்சிதனை முகர்ந்தால் படத்திற்கு சம்பளம் வாங்காமல் டி.இமான் இசையமைத்ததாக கேள்விப்பட்டேன். அவருக்கு வாழ்த்துகள்” என்று பேசினார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த 'பருத்திவீரன்' பஞ்சாயத்து.. வாய் திறக்குமா நட்சத்திர குடும்பம்?