மும்பை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம், மெரி கிறிஸ்துமஸ். தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.
ஏராளமான படங்களை தன்வசப்படுத்தியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ஜவான் படத்தைத் தொடர்ந்து இந்தியில் மற்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜன.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படக்குழு தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனையடுத்து, மும்பையில் நடைபெற்ற மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ப்ரோமோஷன் விழாவில், நடிகர் விஜய் சேதுபதி நடிகை கத்ரினா கைஃப் உடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, "நடிகை கத்ரினாவின் மிகப்பெரிய ரசிகன் நான். நடிகை கத்ரினாவுடன் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டின் முதல் நாளில், நான் அவரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை.
தனது வேலையை மரியாதை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். ஒரு நடிகை இத்தனை நாட்கள் சினிமா உலகில் நீடித்திருப்பது என்பது எளிதல்ல, மேலும் அழகினால் மட்டும் நிலைத்திருக்க முடியாது. ஆனால், கத்ரினா அவரது அயராத உழைப்பு மற்றும் நடிப்பின் மீது கொண்ட காதல், முயற்சியினால் இத்தனை ஆண்டுகள் சினிமா உலகில் நீடித்திருக்கிறார்.
கத்ரினா ஒரு திறமையான நடிகர். மேலும், ஒவ்வொரு காட்சிக்கும் அவர் இடும் மெனக்கெடல்கள் அவரின் முயற்சிகளை விளக்குகின்றது. நடிப்புத் துறையில் கத்ரினா சிந்தனைமிக்க மற்றும் ஆற்றல்மிக்க நடிகர்" என நடிகை கத்ரினாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கதாநாயகனாக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்!