சென்னை: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரியின் படங்கள் எப்போதுமே ஒருவித பரபரப்புடன் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரி - விஷால் கூட்டணியில் ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த புதிய படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. விஷால் படத்திற்கு முதல் முறையாக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சென்னை ஆதம்பாக்கத்தில் மதுபானக் கடை போன்று செட் அமைத்து இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகளை படக்குழுவினர் எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான நேற்று (ஜன.16) அரசு விடுமுறை என்பதால் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட போலி மதுபான கடையை உண்மையான மதுபானக் கடை என நம்பி அப்பகுதியில் உள்ள மது பிரியர்கள் அங்கு கூடியதாக கூறப்படுகிறது.
மேலும் சினிமா படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட போலி மதுபான கடையில், மது பாட்டிலை கொடுக்க வேண்டும் என மது பிரியர்கள் அட்டூழியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தை வீடியோவாக உருவாக்கி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் மதுபானக் கடை போன்று அமைக்கப்பட்டு உள்ள செட்டில், திரண்ட மது பிரியர்களை நடிகர் விஷால் விரட்டுவது போன்று காட்சிகளை இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அயலான் வெற்றி எதிரொலி! கோவை கோயில்களில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!