அனுமதியின்றி 'வாரிசு', 'துணிவு' சிறப்புக்காட்சி - மதுரையில் 34 தியேட்டர்களுக்கு நோட்டீஸ்! - துணிவு
'வாரிசு' மற்றும் 'துணிவு' திரைப்படங்களை நள்ளிரவு மற்றும் அதிகாலையில் உரிய அனுமதியின்றி சிறப்புக் காட்சியாக திரையிட்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை: விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும், அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின. இப்படங்களை ஜனவரி 11, 12, 13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 9.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியில் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களுக்காக பல்வேறு திரையரங்குகள் அதிகாலை மற்றும் நள்ளிரவில் சிறப்புக் காட்சிகளை நடத்தின. இதில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் துணிவு மற்றும் வாரிசு படங்களை திரையிட்டதாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன் படி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், திரையரங்குகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொய் கணக்கு காட்டும் தயாரிப்பாளர்கள்.. துணிவு இயக்குநர் நச்..