இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'வாத்தி'(Vaathi). இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் முழுவதும் தெலுங்கு படம் மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்துள்ளதால் டப்பிங் பாதி இடங்களில் தெலுங்கு படம்போன்று உள்ளதாக கூறப்படுகிறது. கல்வி தனியார்மயம் ஆகுவதை பற்றி சொல்லும் படமாக இருந்தாலும் அதற்கான அழுத்தமான காட்சிகள் இன்றி மோசமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறு படம் கவலையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறைவில்லாமல் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது தனுஷ் படங்களுக்கு இதுவரை இல்லாத ஓபனிங் என்றும் தெரிவித்துள்ளனர். தனுஷின் கடைசி படமான 'நானே வருவேன்' சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது வாத்தி திரைப்படம் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஒரு ஃபீல் குட் படமாக ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு வந்த ’நானே வருவேன்’ படம் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் என்பதே. ஆனால், படம் சுமாரான வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து வாத்தி படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
முதல்முறையாக தனுஷ் நடிக்கும் தெலுங்கு படம். வெங்கி அட்லூரி சிறந்த இயக்குனர் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க தெலுங்கு மசாலா படமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் தனுஷ் படங்களுக்கு வசூல் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு குழு இருக்கிறது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: வாத்தி படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருது பெறுவார் - பாரதிராஜா