ஐதராபாத்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ஜெயசுதா. தமிழில் இயக்குநர் பாலசந்தர் இயக்கிய அரங்கேற்றம் திரைப்படம் மூலம் தமிழ் திரை துறையில் அறிமுகமானார். பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் போன்ற படங்களிலும் நடித்தார். அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து இருந்தார்.
1970 மற்றும் 1980 காலங்களில் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜெயசுதா 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவரும் அப்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் அழைப்பின் பேரில் அரசியலில் இணைந்தார்.
பின்னர் 2009ஆம் ஆண்டு செகந்திராபாத் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், 2014 தேர்தலில் அவரால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தோல்வியை தழுவினார். இதனால் 2016ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் (TDP) சேர்ந்தார். இருப்பினும் ஜெயசுதா அக்கட்சியிலும் பெரும்பாலும் செயல்படாமலே இருந்ததாக கூறப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் தனது மகன் நிஹார் கபூருடன் ஒய்எஸ்ஆர்(YSR) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதே ஆண்டு ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். ஆந்திராவுடன் தனக்கு நெருக்கமான உறவை வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்த ஜெயசுதா, தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: PT Usha: மாநிலங்களவை தலைவரான பி.டி உஷா! ஒலிம்பிக் மங்கையின் சபாநாயகர் கனவு!
இந்நிலையில் அண்மைக் காலமாக நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பேரில் பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எடேலா ராஜேந்தர், ஜெயசுதாவை சந்தித்து கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். ஜெயசுதா பாஜகவில் இணைய வேண்டுமென்றால் சில முன்நிபந்தனைகளை விதித்ததாகவும், அந்த முன்நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் கட்சியில் சேருவேன் என்று கட்சித் தலைமைக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட். 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக பொதுச் செயலாளரும், தெலுங்கானா பொறுப்பாளருமான தருண் சுக் முன்னிலையில் ஜெயசுதா பாஜகவில் இணைந்தார். மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி அவரை சந்தித்து முறைப்படி அழைத்த சில நாட்களில் ஜெயசுதா பாஜகவில் சேர்ந்தாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்குவதாக பாஜக உறுதி அளித்துள்ளதாகவும், செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதியில் அவர் களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. 2023 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வாய்ப்புகளை வலுப்படுத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட பிரமுகர்களை தனது கட்சியில் ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜெய்சுதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!