சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வார வெளியீடாகத் தமிழ் திரையுலகில் இன்று (செப்டம்பர் 15) ஒரே நாளில், 3 தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளன. தமிழ் சினிமாவில் கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த வாரம் மூன்று படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. விஷாலின் மார்க் ஆண்டனி, வாத்தியார் கால்பந்தாட்ட குழு மற்றும் பரிவர்த்தனை ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி: நடிகர் விஷாலின் நடிப்பில் உருவான லத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, அவரின் 33-ஆவது படமாக மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி உள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். நடிகை ரித்து வர்மா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
அதோடு எஸ்.ஜே சூர்யா, தெலுங்கு நடிகர் சுனில், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி, நடிகை அபிநயா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்தி மொழியில் வரும் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர சிறிய பட்ஜெட்டில் உருவான வாத்தியார் கால்பந்தாட்ட குழு மற்றும் பரிவர்த்தனை ஆகிய படங்களும் இன்று வெளியாகி உள்ளன. பரிவர்த்தனை திரைப்படம் கடந்த வாரம் வெளியாக இருந்த நிலையில் சில பிரச்சினைகள் காரணமாக இன்று வெளியாகி உள்ளது.
பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள் பட பாணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளன. இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் அடுத்த வாரம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை? - தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டம் என்ன?