சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருபவர்கள் வரிசையில் அருள்நிதியும் ஒருவர். அருள்நிதி படம் என்றாலே த்ரில்லர் படமாகத் தான் இருக்கும். நம்பி திரையரங்குகளில் சென்று பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எப்போதும் உண்டு. டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டி பிளாக், தேஜாவு என தொடர்ந்து த்ரில்லர் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அருள்நிதி இம்முறை வேறு ஒரு பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளார். ஒலிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், 'ராட்சசி' பட இயக்குநர் சை.கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
கவின் - அபர்ணாதாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'டாடா' படத்தைத் ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். இவரது அடுத்த படமாக 'ராட்சசி' படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' அறிவிக்கப்பட்டுள்ளது. 'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு படம் குறித்தான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத் லோகிதாஸ்வா, ராஜ சிம்மன், 'யார்' கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதியின் வித்தியாசமான கெட்டப் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தனது முதல் படமான வம்சம் படத்தில் கிராமத்து இளைஞன் வேடத்தில் நடித்து அசத்திய அருள்நிதி அதன்பிறகு த்ரில்லர் படம் நோக்கி நகர்ந்துவிட்டார். இந்த படத்தின் மூலம் மீண்டும் கிராமத்து ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முறுக்கு மீசை, வேட்டிக்கட்டு எல்லாமே படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இதையும் படிங்க: "தேசிய விருது இன்னும் கிடைக்கல ஆனால் ஆஸ்கர் வாங்கிட்டேன்" - பாடலாசிரியர் சந்திரபோஸ் சிறப்பு நேர்காணல்!