சென்னை: நடிகர் சந்தானம் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் வல்லவன், அழகிய தமிழ் மகன், சிறுத்தை உல்ளிட்ட பல தமிழ் படங்களில் காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக களம் இறங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. இதனால் சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ’டிடி ரிட்டர்ன்ஸ்’. இந்த படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சந்தானம், நடிகை சுரபி, தங்கதுரை, கூல் சுரேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசும்போது, “இதுவரை நான் நடித்த படங்கள், இது சந்தானம் படமே இல்லை என்ற கருத்து பரவி வந்தது. இது நிச்சயம் சந்தானம் படமாக இருக்கும். மொட்டை ராஜேந்திரன் தமிழ் சினிமாவின் டாம் க்ரூஸ் என்று சொல்லலாம்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னுடன் லொள்ளு சபா காலத்தில் இருந்து பயணிக்கிறார். நான் இப்போது சினிமாவில் நன்றாக வளர்ந்துள்ளதற்கு காரணம் இவர்கள் தான். எந்த விஷயமாக இருந்தாலும் நாம் வெற்றி பெற ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த படத்தில் எல்லாரும் நேர்மையாக வேலை செய்துள்ளனர். அதனால் தான் இப்படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், “தொடர்ந்து ஒரே மாதிரி காமெடி கதாபாத்திரம் நடித்துவிட்டதால் மாற்றம் வேண்டும் என்று கதாநாயகன் ஆனேன். இனி நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மற்ற வேடங்களிலும் நடிப்பேன். டார்க் காமெடி என்ற பெயரில் நான் நடித்த படங்களில் நான் பேசாமல் மற்ற கதாபாத்திரங்கள் பேசும்படி இருந்தது. இது ரசிகர்களை கவரவில்லை” என்றார்.
தொடர்ந்து, டிடி ரிட்டர்ன்ஸ் என்றால் என்ன என்ற கேள்விக்கு, “இப்படத்தில் டெபாசிட் செய்த பணம் திரும்பி வர வேண்டும் என்பதே” என நகைச்சுவையாக கூறினார். மேலும் மற்ற மொழிகளிலும் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “முதலில் தமிழில் நல்ல படங்களில் நடிக்கலாம். இப்படம் வெற்றி பெற்றால் பான் இந்தியா படமாக மற்ற மொழிகளில் வெளியிடலாம்” என்றார்.
தொடர்ந்து, தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் விலை உயர்த்த கோரியது பற்றிய கேள்விக்கு, பேச மறுத்துவிட்டு, படத்தை பற்றி மட்டும் பேசலாம் என கூறினார்.
இதையும் படிங்க: ‘புராஜெக்ட் கே’ இல் பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்! தலைப்பை அறிவித்த படக்குழு!