சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 65ஆவது திரைப்படமான 'பீஸ்ட்' திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தச்சூழலில், தாம்பரம் நேஷ்னல் திரையரங்கிலும் 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான விஜய் ரசிகர்கள், நேஷ்னல் திரையரங்கில் 'பீஸ்ட்' படத்தின் முதல் காட்சியை பார்க்க இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வீதம் 100 பேருக்கு வழங்கினர்.
இதனால், படம் பார்த்தது மட்டுமில்லாமல் இலவச பெட்ரோலுடனும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் திரையரங்கை விட்டு வெளியேறினர்.