சென்னை: பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்களுக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிடத் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும். சமீப காலங்களில் நடந்த மோசமான சம்பவங்கள் காரணமாக இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். இந்த படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் ஆகும். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ. 10) அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
அந்த வரிசையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படமும் நாளை (நவ. 10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'ஜப்பான்' மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, இந்த இரு படங்களின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையைப் பரிசீலனை செய்த தமிழக அரசு 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை என 6 நாட்களுக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது.
அதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு சிறப்புக் காட்சிகளுடன் சேர்த்து ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் காட்சியாக 9 மணிக்கு மேலாகத் திரையிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் திரையரங்குகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், வாகன நிறுத்துமிடம், பார்வையாளர்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசலைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளையும் செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் விஜய் நடித்து வெளியான 'லியோ' மற்றும் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' ஆகிய படங்களுக்குத் தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்காமல், முதல் காட்சி காலை 9 மணிக்குத்தான் திரையிடப்பட்டது. தற்போது தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கும் அதே கட்டுப்பாடுகள் தான் போடப்பட்டுள்ளது. தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை; 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!