சென்னை: கிட்டு இயக்கத்தில் கருணாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், கலைப்புலி தாணு, கருணாஸ், கென் கருணாஸ், சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, சீனு ராமசாமி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கருணாஸ் பேசும் போது, இப்படத்தின் மூலம் எனது மகனின் நண்பர் ஈஸ்வர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவருக்கு கென் உதவி செய்துள்ளார். எனக்கு கென் நடிகராக வரவேண்டும் என்பதே ஆசை. வாய்ப்பு தேடுபவர்களுக்கு உதவி செய்வதற்கே இப்படத்தை தயாரித்தேன். ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டில் விஸ்காம் படித்துவிட்டு ஏராளமான மாணவர்கள் சினிமா கனவுகளுடன் வருகின்றனர். அவர்களுக்கு இங்கே சரியான வழிகாட்டுதல் இல்லை.
தமிழ் சினிமாவில் உள்ள சங்கங்கள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை. தமிழ் சினிமா இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து எத்தனையோ பேருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்துள்ளேன். அதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. கிராமத்தில் இருந்து சினிமா ஆசையில் வரும் இளைஞர்களுக்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளேன் என்றார்.
இதையும் படிங்க: வைரமுத்துவின் வரிகளுக்கு எப்படி மெட்டு அமைப்பது என்று தெரியவில்லை.. கென் கருணாஸ்