நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சிவா, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தத் திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். ’வீரம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் சிறுத்தை சிவா படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவுடன் மாயாவி, ஆறு, சிங்கம் 1, 2 படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார். இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல்வேறு நடிகைகள் பெயர் அடிபட்டு வந்த நிலையில் தற்போது திஷா பதானி நடிக்க உள்ளார்.
இப்படத்தின் பூஜை கடந்த மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. இப்படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை(செப்.9) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மோஷன் போஸ்டருடன் படத்தலைப்பும் வெளியாக வாய்ப்பு உள்ளதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ படத்தில் நயன்தாராவின் லுக் வெளியானது