இந்த உலகில் பிறக்கும் அனைவரும் புகழோடு வாழ்வதில்லை. ஒருவர் புகழோடு வாழ்வது ஒன்று பிறப்பால், மற்றொன்று உழைப்பால். இதில் இரண்டாவது ரகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Super statr rajinikanth). எங்கோ ஒரு ஊரில் பேருந்து நடத்துனராக வாழ்ந்து வந்தவரை சூப்பர் ஸ்டாராக மாற்றியது சினிமா. இது அவரே கனவிலும் நினைத்துப் பார்த்திடாத ஒன்று.
கருப்பான முகம், பரட்டை தலை என கதாநாயகன் கட்டத்துக்குள் அடங்காத ஒருவரைத் தமிழக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள் என்றால் அது ரஜினிகாந்த்துக்கு மட்டுமே உரித்தானது. 1950ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். இவரே தற்போது ரஜினியாக அறியப்படுகிறார். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.
அப்போது இவரைப் பார்த்த கே.பாலசந்தர் 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே வில்லன் வேடம் ஏற்றுச் சிறிது நேரமே வந்தாலும் முத்திரை பதித்தார். முதல் படத்திலேயே யார் இவர் என எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்தார். பிறகு தொடர்ந்து ஒருசில படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் கதாநாயகனானார். பைரவி என்ற படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஒரு நடிகன் நாயகனாவது வெகு சுலபம் இல்லை. தன்னை நம்பி திரையரங்குகளில் குவியும் ரசிகனைத் தான் முழு திருப்திப் படுத்தி அனுப்ப வேண்டும் அப்போதுதான் அவன் நம்மை ஏற்றுக்கொள்வான் என்பதை நன்கு உணர்ந்த ரஜினிகாந்த் அதற்கு ஏற்றார் போல் படங்களைத் தேர்வு செய்து நடித்தார்.
80களில் பில்லா, முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன் போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து 90களிலும் இவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், படையப்பா என்று தொடர் வெற்றிகளைக் குவித்து வந்தவர் 2000களிலும் இந்த புயல் சுழன்றடித்தது. சந்திரமுகி, எந்திரன், சிவாஜி என இன்றைய தலைமுறை ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.
ஒரு குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு நடிகனுக்கு ரசிகனாவது என்பது வரம். அந்த வரத்தை வரமாகப் பெற்றவர் ரஜினிகாந்த். தில்லுமுல்லு, வீரா, மன்னன், வேலைக்காரன், முத்து போன்ற படங்களில் ரஜினியின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிக்கவைப்பவை.
நகைச்சுவை , காதல், சண்டை என எல்லா பகுதியிலும் தூள் கிளப்பினார். அதுமட்டுமின்றி எந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வியாபார எல்லையையும் விரிவுபடுத்தினார். இப்படம் முதல் முதலில் 100கோடி ரூபாய் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 இன்று வரை 800கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. ரஜினியின் படங்களுக்கு இங்கு மட்டுமின்றி ஜப்பான் போன்ற உலக நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
விக்ரம் நடித்த சாமி படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியபோது, எனது ஆரம்பக்கால திரை வாழ்க்கையிலேயே கே.பாலசந்தர் கிடைத்துவிட்டார் அதனால் நான் நடிகர் ஆவதற்கோ ஸ்டார் ஆவதற்கோ கஷ்டப்படவில்லை என்றார். அதுமட்டுமின்றி அதே மேடையில் அமர்ந்திருந்த விக்ரம், விஜய், சூர்யா ஆகியோரை அவர்களின் படங்களின் பெயரைச் சொல்லிப் பாராட்டினார் அதுதான் ரஜினி.
இப்போது கூட நல்ல படங்களைப் பார்த்தால் அந்த படத்தின் இயக்குனர், நடித்தவர்களை அழைத்து பாராட்டுவார். சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பதவி போன்றது அந்த நேரத்தில் யார் படங்கள் அதிக வசூல் செய்து மக்களால் விரும்பப்படுகிறதோ அவர்கள் தான் சூப்பர் ஸ்டார் நீங்கள் எல்லோருமே சூப்பர் ஸ்டார்தான் என்று பேசினார். ஆனால் இப்போது வரை ரஜினியின் படத்தின் வசூலை மிஞ்ச வேறு யாராலும் முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ரஜினிகாந்த் தனது நூறாவது திரைப்படமாக ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பி நடித்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் மனதளவில் வருத்தப்பட்டார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து 2002ம் ஆண்டு பாபா என்ற படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்தார். இந்த படமும் ரஜினியின் கனவு படமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த படமும் தோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் ரஜினிகாந்த் இனி அவ்வளவு தான் திரைத்துறையில் நிலைக்க மாட்டார் என்று பேசத் தொடங்கினர். ரஜினியும் தனது கடைசி படம் பாபா தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.
ஆனால் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2005ம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியானது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாகத் தமிழகத்தில் 800நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் இப்படி சொன்னார், "பாபா படம் சரியா போகாததால் ரஜினிகாந்த் இனி அவ்வளவு தான் என்றார்கள் ஆனால் நான் யானை அல்ல, குதிரை.
யானை விழுந்தால் எழத் தாமதமாகும் குதிரை உடனே எழுந்துகொள்ளும்" என்றார். இதைக் கேட்டு ரசிகர்கள் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. அதன் பிறகு இந்த குதிரை இன்று வரை நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. 80களில் தொடங்கி இப்போது வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கிறார். உலகில் எந்த ஒரு நடிகரும் இப்படி வரலாறு படைத்ததில்லை. 73ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஈடிவி பாரத் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: 'எனது பயோபிக்கில் சிவகார்த்திகேயன்' - கிரிக்கெட் வீரர் நடராஜன் தகவல்!