சென்னை: 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், பி.எஸ்.மித்ரன். ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் குறித்து பேசிய இப்படம், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ என்ற படத்தை மித்ரன் இயக்கினார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் சர்தார் என்ற படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்திருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
லைலா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனும், பத்திரிகையாளரான ஆஷா மீரா ஐயப்பனும் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று (பிப்.12) திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் இயக்குநர்கள் ரத்னகுமார், ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், பி.எஸ்.மித்ரன்-ஆஷா மீரா ஜோடிக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காதலர் தினம் நெருங்கும் நிலையில், காலித்த பெண்ணை மித்ரன் திருமணம் செய்துள்ளதால் இதுதான் உண்மையான காதலர் தின ஸ்பெஷல் என, ரசிகர்கள் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகரின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் பாக்யராஜ்