சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் எந்தக் காரணத்திற்காக ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது. அந்தப் படத்தை ஓட வைத்த கொண்டாட வைத்த ரசிகர்களுக்கும் கூட அந்தக் காரணம் தெரியாது. ஒரு சில படங்கள் தான் காலம் கடந்தும் ரசிக்கப்படுபவை. அப்படிப்பட்ட படம் தான் சூர்யவம்சம். இந்தப் படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 26 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இப்போதும் சமூகவலைதள மீம்ஸ்களில் வலம் வருகின்றன.
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் இப்படத்தில் கலக்கியிருந்தார். தேவயானி, ராதிகா, மணிவண்ணன் என பலரும் பட்டையைக் கிளப்பிய படம். இப்போது டிவியில் இப்படம் போட்டாலும் குடும்பங்கள் டிவி முன் ஆஜராகிவிடுவர். இதுதான் உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைக் கொண்டாடிய படம். இப்படத்தின் இயக்குநர் விக்ரமனே இந்தப் படம் ஏன் ஹிட்டானது என்றும்; தெரியாமல் ஓடியது என்றும் சொல்லியிருந்தார். மேலும் இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படம் இப்போது உள்ள 2k கிட்ஸ்கள் பார்த்தாலும் சலிப்பு ஏற்படாத படமாக இருக்கும். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. அப்பா - மகன், தாத்தா - பேரன் பாசம், காதல் என ஆல் ஏரியாவிலும் கில்லியாக இருக்கும். இப்படத்தில் தேவயானி, சரத்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் காட்சி இப்போதும் சமூக வலைதளங்களில் மீம் கன்டென்டாக உலா வருகின்றன. ’இவரு பெரிய சூர்ய வம்சம் தேவயானி தெரியாம ஆசிர்வாதம் வாங்குறாராமா’, அதே போல் இட்லி உப்புமாவை இல்லத்தரசிகளுக்கு அறிமுகப் படுத்தி கணவன்மார்களின் பாவத்தை வாங்கிக் கொண்டார் இயக்குநர் என்பது போன்ற மீம்ஸ்களும் இன்று வரை பிரபலமானவை.
'பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்ஸ்' ஆகச் சிறந்த மீம்ஸ் வசனமாக மாறியது. ஒரே பாடலில் பணக்காரன் ஆவது எல்லாம் அப்போது சிலிர்க்க வைத்தது. இப்போதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்தால் சூர்ய வம்சம் படத்தின் வசனங்கள் தான் அதிகம் இருக்கும். அந்த அளவுக்கு இன்றைய தலைமுறையினர் மனதில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது தெரியும்.
“படிச்ச நான் எங்க, படிக்காத நீ எங்க, காலம் எந்தளவு வேகமா சுழலுது பாத்தீங்களா”, ”உளி விழும் போது வலினு அழுத எந்த கல்லும் சிலை ஆக முடியாது, ஏர் உழும் போது கஷ்டம்னு நெனச்ச எந்த நிலமும் விளைந்து நிற்காது. அதுபோல அப்பா கோவப்படுறத திட்றத தப்புன்னு நினைக்குற எந்த புள்ளையும் முன்னுக்கு வர முடியாது” என்ற கிளாஸிக் வசனமும் ஒவ்வொரு தந்தையர் தினத்தன்றும் சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைரல் ஆகும்.
அப்போதே ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய பாடல் என்றால் அது 'நட்சத்திர ஜன்னலில்' தான். அதே மாதிரி ஆனந்தராஜ் நடிப்பும் அவரது வசனமும் இப்போதும் பேசப்படும் ஒன்று. ஒரு படமாக பார்த்தால் இதில் என்ன இருக்கிறது, இது எப்படி ஓடுச்சு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், எம்ஜிஆர் படத்துக்கு பிறகு கிராமங்களில் மக்கள் வண்டி கட்டிக் கொண்டு திரையரங்குகளை நோக்கி சூர்யவம்சத்தைப் பார்க்க படையெடுத்தனர் என்பதே நிதர்சன உண்மை.
”மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” என்ற வசனத்தை மறக்க முடியுமா?. ”அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஆனா போதும் சின்ராச கைலயே புடிக்க முடியாது” போன்ற மீம் கன்டென்டை கடக்காமல் நமது ஒரு நாள் நகராது. இப்படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடல் அன்றைய இளைஞர்களின் மத்தியில் கிளாசிக் பாடலாக அமைந்தது. இப்படம் எடுக்கப்படும் போது 'நாட்டாமை' படத்துடன் இப்படத்தை தொடர்புபடுத்தி பேசினார்கள் என்றும், ஆனால் இது நாட்டாமை படத்தை விட இரண்டு மடங்கு வெற்றி பெற்றதாகவும் விக்ரமன் கூறியிருந்தார்.
ஒரு திரைப்படம் குறிப்பிட்ட காலகட்டத்தைத் தாண்டி சினிமா ரசனை மாறிய பின்னும் இன்றும் ரசிக்கப்படுவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. இனி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சின்ராசு நம்மை மகிழ்வித்துக்கொண்டே இருப்பான். இனி, இந்த கூட்டணி நினைத்தாலும் இதுபோன்ற படத்தை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தாலும் சூர்யவம்சம் 2 மூலம் சின்ராசு மீண்டும் வர வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: சினிமா சூட்டிங்கில் மலையாள நடிகர் பிருத்விராஜ் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி