சென்னை: நண்பன் குழுமம் சார்பில் புதிதாக நண்பன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் உள்ள முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஶ்ரீராம், நடிகர்கள் ஆரி, நாசர், ரோபோ சங்கர் மற்றும் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி உள்ளிட்டப் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரோபோ சங்கர், ''இது ஒரு நல்ல விழா, நல்ல விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நண்பன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடக்க விழா மூத்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, மூத்த கலைஞர்களுக்கு விருது என இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது'' என்றார்.
மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றி சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான், தளபதி தளபதி தான். அவர்களுக்கான தனியிடம் உண்டு; அதை யாரும் பிரித்துப் பார்க்க முடியாது'' என்றார்.
மேலும் ''அவர்களுக்கு பிறகு அந்த இடம் காலியாக இருக்கும்போது பார்க்கலாம். ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது பற்றி நான் கேட்கவில்லை. ரசிகர்களுக்கு எதுவாக இருந்தாலும் ரஜினி ரஜினி தான். விஜய் விஜய் தான். ரஜினிக்கு பிறகு அடுத்த தலைமுறை விஜய் தான். ரஜினிக்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த நடிகர் விஜய் தான். ஆனால், இவர்கள் எல்லோருக்கும் மேல் ஒருவர் இருக்கிறார். அவர் எங்கள் உலக நாயகன் கமல்ஹாசன்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த நண்பன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தொடக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். மேலும் இந்த விழாவில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடலுக்கு நடனமாடினார். இதனையடுத்து அரங்கில் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். மேலும் பல்வேறு தமிழ் சினிமா இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மிரட்டும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!