சென்னை : இயக்குநர் ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் என கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரது படங்கள் எப்போதுமே ஒருவித பரபரப்புடன் ஆடியன்ஸை திருப்திப்படுத்துவது போல் இருக்கும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால் சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உள்ளது. இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது விஷாலின் 34வது படமாகும்.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் இந்த புதிய படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. விஷால் படத்திற்கு முதல் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இதுமட்டும் அல்லாது, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே ஹரி மற்றும் விஷாலின் கூட்டணி ஹிட்டடித்துள்ளதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (டிச 01) இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அய்யனார் கோயில் முன்பு ஒருவர் கை, கால் கட்டப்பட்டு மண்டியிட்டு நிற்க, கோபமாக வரும் விஷால் அவரை அரிவாளால் வெட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பின்னணியில் இயக்குநர் ஹரியின் குரலில் "கண்ணீர் செந்நீராய், குரோதம் குருதியாய், உக்கிரம் உதிரமாய், ரணங்கள் ரத்தமாய்" என்று ரத்தத்தை மையப்படுத்திய வசனங்கள் ஒலிக்கின்றது. இதன் மூலம் இந்த படம் முழுக்கமுழுக்க ஆக்க்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்திற்கு "ரத்னம்" என்று பெயரிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புது பிரச்சினையில் சிக்கிய பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் - என்ன காரணம்?