சென்னை: இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக அறியப்படுபவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி, இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். எம்ஜிஆர் தொடங்கி கமல் ஹாசன் வரை இப்படத்தை எடுக்க முயற்சித்து, முடியாமல் போனதை மணிரத்னம் எடுத்து சாதித்தார். முதல் பாகமாக வெளியான இப்படம் ரூ.500 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது. லைகா புரொடக்சன்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது.
விக்ரம், கார்த்தி உள்ளிட்டோரின் நடிப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு இப்படம் கலவையான அனுபவத்தை கொடுத்தது என்றாலும், பெரும்பாலான ரசிகர்கள் நமது வரலாற்றை சிதைக்காமல் படத்தை எடுத்துள்ளதாக பாராட்டினர்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில வதந்திகள் பரவி வந்தது.
இந்த நிலையில் இன்று லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரனின் பிறந்தநாளை ஒட்டி பொன்னியின் செல்வன் படக்குழு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, அதில் சோழர்கள் திரும்ப வருகிறார்கள் என்று குறிப்பிட்டு ரிலீஸ் தேதி ஏப்.28 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி சொன்ன தேதியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் (Ponniyin Selvan2) வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கை கைப்பற்றும் ஈவிகேஎஸ் ? - வெளியேறிய அதிமுக வேட்பாளர்