சென்னை: தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கென தனித்தனி பாடல்கள் இருக்கின்றன. அதும் பண்டிகையையொட்டி வெளியாகும் தமிழ் சினிமாக்களில், அந்த குறிப்பிட்ட பண்டிகைக்கான பாடலோ, காட்சியோ, வசனமோ இடம் பெற்றிருக்கும்.
1996ஆம் ஆண்டு இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான படம், வான்மதி. அஜித்குமார் நடிப்பில் வெளியான இப்படத்தில், தேவாவின் இசையில் உருவான ‘பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா..’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. தற்போது வரையிலும் விநாயகர் சதுர்த்தி அன்று இப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில், ‘காலம் கலிகாலம்’ என்ற பாடலும் அனைவராலும் இன்று வரை ரசிக்கப்படுகிறது. இப்பாடலில் அஜித் நடன அசைவுகளை கொடுக்காமல் இருந்தாலும், பரத்வாஜின் இசையில் ராகவா லாரன்சின் நடன அமைப்பு பாடலை மெருகேற்றியது.
தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வேதாளம் படத்தில் இடம் பெற்றிருந்த ‘வீர விநாயகா’ என்ற பாடலும் ரசிகர்களால் தொடர்ந்து ரசிக்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், ரகுமான் இணைந்து நடித்த ‘உடன் பிறப்பு’ படத்தில் இடம் பெற்ற ‘சாமி வருது.. சாமி வருது..’ என்ற பாடல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பாடலாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் வெளியான இப்பாடல் தற்போதும் எவர்கிரீனாக அமைந்துள்ளது.
அதேபோல பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘ஏபிசிடி’ படத்தில் இடம் பெற்ற ‘வா சுத்தி சுத்தி..’ என்ற பாடலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை வெளிக்காட்டும் பாடலாக அமைந்தது.
இதுமட்டுமின்றி கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘முந்தி முந்தி விநாயகனே..’ மற்றும் அன்னை ஓர் ஆலயம் படத்தில் இடம் பெற்ற ‘அப்பனே அப்பனே.. பிள்ளையார் அப்பனே..’ போன்ற பாடல்களும் விநாயகரை பற்றிய பாடல்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: யானை கோயில் கட்டி வழிபடும் பழங்குடியினர் - விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு