சென்னை: 60 வயதை கடந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமும், மருத்துவமனையும் வேண்டும் என்று மத்திய அரசுக்கு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை வைத்தார். அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யும் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் பெப்சி தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி இன்று (பிப்.26) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'தமிழ் திரைப்படத்துறையில் எங்களது கடைநிலை ஊழியர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை தொடுவதற்கு தற்போதைய நிலையிலும் ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆவதாகவும், திரைப்படத்துறையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் வருந்தினார்.அவ்வப்போது, சில பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழப்பதாகவும், இது ஒருநாள் செய்தியாக வந்தப்பின்னர், மறுநாள் வருத்தம் தெரிவிப்பதுடன் மறந்து விடுவதாகவும், இத்தகைய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய எந்த வழிவகையும் இல்லாமல் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
சமீபத்தில் கூட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் படத்தில் ஸ்டன்ட்மேன் ஒருவர் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு முன் லைட் மேன் இரண்டு பேர் உயிரிழந்ததையும்; பெரிய நடிகர்களின் படங்களில் தொழிலாளிகள் உயிரிழந்துவிட்டால் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் குடும்பத்துக்கு உதவி கிடைகப்படுவதாகவும் கூறினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில், அதாவது இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து நடந்த போது 1 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்ததைக் குறிப்பிட்டார்.
ஆனால், படமெடுக்க சிரமப்படும் சிறிய தயாரிப்பாளர்கள் படங்களில் விபத்து நடந்தால், மரணம் ஏற்பட்டால் உதவ முடியாத நிலையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாகவும், எப்படி ஒரு தொழிலாளர்கள் இறந்தால் மத்திய மாநில அரசுகள் உதவி செய்கிறதோ? அதே போல், திரைப்பட துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டாலோ? அல்லது உயிரிழந்தாலோ? அவர்களுக்கான மருத்துவ செலவுகள், மருத்துவ வசதி அல்லது அந்த குடும்பத்துக்கான நிதி உதவியை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் பேசிய அவர், 'இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் விபத்து ஏற்பட்டு லைட் மேன் உயிரிழந்த அதிர்ச்சியில் அவர் ஸ்டுடியோவை மூடி விட்டதாகவும், அந்த வலி அவரை நேரடியாக பாதித்ததாகவும் கூறினார். அதனால் அவரே எங்களை தொடர்புகொண்டு, லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பணிபுரியும் இடங்களில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களுக்கு உதவ கார்ப்பரேட் ஃபண்ட் ரெடி பண்ணுகிறேன் என்று சொன்னதாகவும் கூறினார்.
அதற்காக மார்ச் 19 ஆம் தேதி ஒரு பிரத்யேக இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி மூலம் பெறப்படும் நிதியை, திரைத்துறையில் உள்ள முக்கியமானவர்களை பொறுப்பாளராக வைத்து லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எந்த படத்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டால் அல்லது உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவகள் நிதி ஆதாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஏ.ஆர்.ரகுமான் அந்த குடும்பத்துக்கு பண்ண வேண்டியதை பண்ணிட்டார். இருந்தாலும் இது போன்ற விபத்தில் பாதிக்கப்படும் எல்லாருக்கும் உதவ வேண்டும் என்று முன்வந்தது ரொம்ப நல்ல விஷயம் என்று பெருமையுடன் கூறினார். திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஏ.ஆர்.ரகுமானை முன்னுதாரணமாகக் கொண்டு, கடைநிலை ஊழியர்கள், தினக்கூலி வாங்கும் 24 சங்கங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்கள் நலனுக்காக நடிகர்கள், கலைஞர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 1 சதவீதத்தையாவது நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரையரங்குகளில் வரும் டிக்கெட்டில் 1 டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் பிடித்தம் செய்து, அதை நிதி ஆதாரமாகக் கொண்டு திரைப்பட தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்தப் பிறகு, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசுக்கு கோரிக்கையாக வைப்பத்தாகக் கூறினார். அரசாங்கம் நிறைய உதவிகள் செய்தாலும் பல நேரங்களில் அது முறையாக தொழிலாளிகளை வந்து சேர்வதில்லை என்றும் ஒரு தொழிலாளர் சம்பளம் 1000 ரூபாயை தொட நூறு வருடம் ஆவதாகவும் கூறினார். எங்களுக்கு இஎஸ்ஐ கிடையாது என்றும் நாங்கள் மாதம் 25 நாட்கள் பணிபுரிந்தாலும் இஎஸ்ஐ இல்லை என்றும் தெரிவித்தார். எனவே, தொழிலாளருக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
திரைத்துறையில் உள்ள தங்களுக்கு மருத்துவமனை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும், வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்கள் திரைப்பட தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்வது மாதிரியான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.
எங்கள் சங்கத்தை சேர்ந்த கலைஞர்கள், தொழிலாளர்கள் சேர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்டுடியோ ஒன்றை துவங்க இருக்கிறோம். அதை முதலமைச்சர் வந்து துவக்கி வைக்க வேண்டும் என்றும், அதில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளதாகவும், மார்ச் 19-ல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி (சிறப்பான நிகழ்ச்சி) மூலம் பெறப்படும் நிநி உதவி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார்.
மேலும், எல்லா படப்பிடிப்பு தளத்திலும் குறைந்தபட்ச பாதுகாப்பு கருவிகள் இருக்க வேண்டும். ஏப்ரல் 1 முதல் பாதுகாப்பு கருவிகள் இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் தான் எங்களது தொழிலாளிகள் பணியாற்றுவார்கள் என்றும், அது போன்ற பாதுகாப்பு வசதிகள் இருந்தால் தான் எனது ஸ்டுடியோவை மீண்டும் திறப்பேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகவும் செல்வமணி பேசினார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளரிடம் மன்னிப்புக்கேட்ட நடிகை ரித்திகா சிங் - என்ன காரணம்?